சட்டப்பேரவை வளாகத்தில் பிப்.10-ல் கள் விற்பனை செய்யப்படும்: கள் இயக்கம் தீர்மானம்
First Published : 07 Feb 2011 09:36:53 AM IST தினமணி
கோவை, பிப். 6: சட்டப்பேரவை வளாகத்தில் வரும் பிப்ரவரி 10-ம் தேதி கள் விற்கப்படும் என்று தமிழ்நாடு கள் இயக்கம் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.
தமிழ்நாடு கள் இயக்கத்தின் மாநில ஆலோசனைக் கூட்டம், தமிழக விவசாயிகள் சங்கத்தின் தலைவர் என்.எஸ்.பழனிசாமி தலைமையில் கோவையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
கள்ளுக்கு விதித்திருக்கும் தடையை நீக்கும் பொருட்டு நீதிபதி கே.பி.சிவசுப்பிரமணியன் தலைமையிலான குழுவின் அறிக்கையை வெளியிட தமிழ்நாடு அரசு மறுத்து வருகின்றது. தமிழக சட்டப்பேரவை இடைக்கால நிதிநிலைக் கூட்டத் தொடரின் போது, மக்களின் நலன் கருதி, அரசு கொண்டிருக்கும் மதுக் கொள்கை மற்றும் மதுவிலக்கில் மாற்றங்கள் பற்றிய அறிவிப்பு இருக்கும் என கள் இயக்கம் நம்பிக்கை கொண்டுள்ளது.
ஏற்கெனவே அறிவித்தபடி சட்டப்பேரவை வளாகத்தில் கள் விற்கப்படும். இதன்படி பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும், அரசுக்கும், காவல்துறைக்கும் இடையூறு இல்லாமல் கள் விற்பனை மேற்கொள்ளப்படும். சட்டப்பேரவை வளாகப் பகுதியில் அமைதி காப்பதும், சபை நடவடிக்கைகளுக்கு இடையறு செய்யாமல் இருப்பதும் அவசியமாகின்றது.
தமிழ்நாடு கள் இயக்கத்தின் கொங்கு மண்டல அமைப்பாளரும், தமிழக விவசாயிகள் சங்கத்தின் ஆலோசகருமான பி.கே.ராமசாமி மட்டும் சட்டப்பேரவை வளாகத்தில் பிப்ரவரி 10-ம் தேதி காலை 11 மணிக்கு கள் விற்பனையை மேற்கொள்வார் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இந்தக் கூட்டத்தில் தமிழ்நாடு கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் செ.நல்லசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
பொருட்காட்சியில் கள்ளை விற்க அனுமதிக்க வேண்டும்: கோவை மத்திய பேருந்து நிலையம் எதிரில் உள்ள மைதானத்தில் நடைபெற்று வரும் அரசு பொருட்காட்சியில் போதை தராத, புளிக்காத, கலப்படம் இல்லாத இயற்கையான கள்ளை விற்க தமிழ்நாடு கள் இயக்கத்துக்கு அனுமதி தரவேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
——————————————————————————————————-
கள் மீதான தடையை அகற்ற வலியுறுத்தல்
First Published : 07 Feb 2011 09:59:34 AM IST தினமணி
தாராபுரம், பிப். 6: சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன் கள் மீதான தடையை அகற்ற வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.
தமிழ்நாடு கள் இயக்க ஆலோசனைக் கூட்டம், தாராபுரம் அருகேயுள்ள நாராணாபுரத்தில் சனிக்கிழமை நடைபெற்றது. மாநில அமைப்பாளர் மணி தலைமை வகித்தார்.
கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் நல்லசாமி, திருஞானசம்பந்தர் அறக்கட்டளைச் செயலர் டாக்டர் ஜெய்லானி, உடுமலை பிரமுகர் சுந்தரமூர்த்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
சட்டப்பேரவைத் தேர்தல் அறிவுப்புக்கு முன், கள் இறக்கி, விற்பனை செய்வதற்கு விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்க வேண்டும். நடப்பு பட்ஜெட் கூட்டத் தொடரிலேயே இதற்கான அறிவிப்பை வெளியிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தித் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
————————————————————————————————-
கள் இறக்கிய விவசாயி கைது
First Published : 07 Feb 2011 09:58:52 AM IST தினமணி
அவிநாசி, பிப். 6: அவிநாசி நம்பியாம்பாளையத்தில் ஞாயிற்றுக்கிழமை கள் இற்க்கிய விவசாயி கைது செய்யப்பட்டார்.
அவிநாசி நம்பியாம்பாளையம் ஊராட்சி சுண்டக்காம்பாளையம் ஓடையத்தோட்டத்தை சேர்ந்த பழனிசாமி (70). இவர் தனது தோட்டத்தில் கள் இறக்குவதாக தகவல் அறிந்த அவிநாசி போலிஸôர் அவரை கைது செய்தனர். இவரிடமிருந்து 5 லிட்டர் கள் பறிமுதல் செய்யப்பட்டது.
—————————————————————————————————
விவசாயத்தை வீழ்த்திய தொழிற்சாலைகள்!
First Published : 07 Feb 2011 12:00:00 AM IST தினமணி
கடலூர் உப்பனாற்றங் கரையில் இயற்கை எழிலையும் விவசாயிகளின் வாழ்வாதாரத்தையும் அழித்துவிட்டு, அதில் தலைநிமிர்ந்து நிற்கும் சில ரசாயன ஆலைகள். கடலூர் அருகே
கடலூர், பிப். 6: கிழக்குக் கடற்கரை ஓரமாக கடலூர் வழியாக, பரங்கிப்பேட்டை முதல் ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் வரை நீண்டு கிடப்பது பக்கிம்ஹாம் கால்வாய்.
பக்கிம்ஹாம் கால்வாயின் இருபுறமும் பச்சைப் பசேலென காட்சி தந்த வேளாண் பயிர்கள், உடலுக்கும் மனதுக்கும் இதம் தரும் கண்கொள்ளா காட்சி. வானுயர வளர்ந்து நிற்கும் பனை மரங்கள், மாமரங்கள், தென்னை மரங்கள், ஆயிரக்கணக்கான ஏக்கரில் முந்திரிக் காடுகள், சவுக்குத் தோப்புகள், மணிலா, வெட்டிவேர் வயல்கள், கத்தரி, வெங்காயம் உள்ளிட்ட தோட்டக்கலைப் பயிர்கள் என்று விரிந்து பரந்து கிடந்த நிலப்பரப்பு இன்று, தொழிற்சாலைகளால் ஆக்கிரமிக்கப்பட்டு புகை கக்கிக் கொண்டு இருக்கின்றன.
ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களில் மரங்கள் வெட்டப்பட்டு, சில கட்டடங்கள் தவிர மற்றபடி, பெரும்பகுதி சுடுகாடாய்க் காட்சி அளிக்கின்றன. வேளாண்மையை அழித்தது மட்டுமன்றி, நச்சு வாயுக்களை பெருமளவுக்கு வெளியேற்றி 50-க்கும் மேற்பட்ட கிராமங்களில் மக்களின் சுகாதாரத்தை பாழ்படுத்தி வருகின்றன.
அன்று வெள்ளைக்காரர்களால் எளிமையான நீர்வழிப் போக்குவரத்துக்காக உருவாக்கப்பட்ட பக்கிம்ஹாம் கால்வாய் (உப்பனாறு) இன்று தொழிற்சாலைக் கழிவுகளை வெளியேற்றுவதற்கு தகுதியான இடமென மத்திய, மாநில அரசுகள் வகைப்படுத்தி, அங்கு பன்னாட்டு ரசாயனத் தொழிற்சாலைகளுக்கு அனுமதி அளித்து வருவது, குதிரை குப்புறத் தள்ளியதுமன்றி குழியும் பறித்த கதையாகி விட்டது.
3 ஆயிரம் ஏக்கரில் சிப்காட் ரசாயனத் தொழிற்பேட்டை, 3 ஆயிரம் ஏக்கரில் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை, 1,400 ஏக்கரில் அனல் மின் நிலையம், 1,000 ஏக்கரில் தனியார் கப்பல் கட்டும் தளம், இன்னும் பெயர் வைக்கப்படாத ஆலைகளுக்கும் ஆயிரக்கணக்கான ஏக்கர் விளை நிலங்கள், நல்ல விலை தருவதாகவும், அவர்களின் சந்ததிக்கு வேலை தருவதாகவும், விவசாயிகளிடம் ஆசைகாட்டி பறிக்கப்பட்டுவிட்டன.
விளை நிலங்களை இழந்த, பாதிக்கப்பட்ட கிராமங்களைச் சேர்ந்த இளைஞர்கள், இந்தத் தொழிற்சாலைகளில் நாளொன்றுக்கு ரூ. 60 முதல் ரூ. 80 வரை ஒப்பந்தத் தொழிலாளிகளாக கூலிவேலை பார்க்கும் அவல நிலைக்குத்தான் தள்ளப்பட்டனர். ஆனால் விவசாய நிலங்களை பறித்து அவற்றில் தொடங்கப்பட்ட ஆலைகள், தங்கள் உற்பத்திப் பொருள்களை வெளிநாடுகளில் விற்று, கோடிக்கணக்கான ரூபாய் கொள்ளை லாபம் சம்பாதித்து வருகின்றன.
இவற்றுக்கெல்லாம் முன்னதாக ஆயிரக்கணக்கான ஏக்கர் விளை நிலங்கள் இறால் பண்ணைகளாக மாற்றப்பட்டு, இன்று விதிகளை இறுக்கியதன் காரணமாக, பல இறால் பண்ணைகள் மூடப்பட்டாலும், அவற்றில் மேற்கொண்டு விவசாயம் செய்ய முடியாத பரிதாப நிலைக்கு அந்த நிலங்கள் தள்ளப்பட்டு, சுடுகாடாகக் காட்சி அளிக்கின்றன.
பறிபோனது போக மிச்சம் சொச்சம் இருக்கும் நிலங்களில் இன்றும் பனைமரங்கள், தென்னை மரங்கள், மணிலா, வெட்டிவேர், மலர்ச் செடிகள் பயிரிட்டு நம்பிக்கையுடன் வாழ்க்கை நடத்திக் கொண்டு இருக்கிறார்கள் ஏழை விவசாயிகள்.
தியாகவல்லி, நொச்சிக்காடு, நடுத்திட்டு, ராசாப்பேட்டை உள்ளிட்ட கிராமங்களில், 5 ஆயிரம் ஏக்கரில் பயிரிடப்பட்ட வெட்டிவேர் இன்று, 150 ஏக்கராகச் சுருங்கி விட்டது. ஓராண்டுப் பயிரான வெட்டிவேர் பயிரிடுவதில், ஏக்கருக்கு 4 டன் வெட்டிவேர் கிடைக்கும் என்றும், ஆண்டு வருவாய் ரூ. 2 லட்சம் என்றும் நினைவு கூறுகிறார், தியாகவல்லி விவசாயி சாமிக் கச்சிராயர்.
ஆயிரக்கணக்கான வெட்டிவேர் வயல்களும், சவுக்குத் தோப்புகளும், மணிலா தோட்டங்களும், முந்திரிக் காடுகளும், காய்கறித் தோட்டங்களும் அழிக்கப்பட்டு, அவைகள் நச்சு வாயுக்களை உமிழும் தொழிற்சாலைகளாக மாற்றப்பட்டதுதான் உலகளாவிய புதிய பொருளாதாரக் கொள்கையா என்று வினா எழுப்புகிறார் சாமிக் கச்சிராயர்.
—————————————————————————————————–
பால் உற்பத்தியாளர்கள் இன்று முதல் வேலைநிறுத்தம்: ஆவின் பால் விநியோகம் பாதிக்குமா?
First Published : 07 Feb 2011 02:11:46 AM IST தினமணி
சென்னை, பிப். 6: கொள்முதல் விலையை உயர்த்தக் கோரி, திங்கள்கிழமை (பிப்ரவரி 7) முதல் பால் உற்பத்தியை நிறுத்தும் போராட்டத்தில் ஈடுபடுவதாக பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கங்கள் அறிவித்துள்ளன.
எனினும், சென்னை உள்பட பல்வேறு இடங்களில் ஆவின் பால் விநியோகம் பாதிக்காத வகையில் அந்தந்த மாவட்ட நிர்வாகங்கள் மூலம் அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.
தமிழகம் முழுவதும் 8,312 பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்கள் உள்ளன. இந்த சங்கங்கள், மாவட்ட ஆவின் ஒன்றியங்கள் மூலம் தினமும் 26 லட்சம் லிட்டர் பால் உற்பத்தி செய்யப்படுகிறது. இதில் தினமும் 20 லட்சம் லிடடர் பால் விற்பனை செய்யப்படுகிறது.
சென்னையில் பால் விநியோகம்: சென்னை மக்களின் தேவைக்காக சேலம், ஈரோடு, கிருஷ்ணகிரி, வேலூர், விழுப்புரம் ஆகிய மாவட்ட பால் கூட்டுறவு ஒன்றியங்களில் இருந்து பெருமளவு பால் கொள்முதல் செய்யப்படுகிறது.
அம்பத்தூர், மாதவரம், சோழிங்கநல்லூர் ஆகிய இடங்களில் உள்ள பால் பண்ணைகளில் நிலைநிறுத்தப்பட்டு, நகரில் தினமும் 10.30 லட்சம் லிட்டர் பால், விற்பனைக்காக விநியோகிக்கப்படுகிறது.
இந்த நிலையில், தனியார் நிறுவனங்கள் விநியோகிக்கும் பாலின் விலை லிட்டருக்கு ரூ.2 முதல் ரூ.5 வரை உயர்த்தப்பட்டது. இதையடுத்து, பால் கொள்முதல் விலையை அரசு உயர்த்த வேண்டும் என்று உற்பத்தியாளர்கள் கோரினர்.
இதைத் தொடர்ந்து, கடந்த ஜனவரி 5-ம் தேதி பால் கொள்முதல் விலையை அரசு உயர்த்தியது. இதன்படி பசும்பால் லிட்டருக்கு ரூ.16.64 ஆகவும் (கூடுதலாக ரூ.1.10), எருமைப் பால் லிட்டருக்கு ரூ.25.20 ஆகவும் (கூடுதலாக ரூ.2.20) உயர்த்தப்பட்டது.
ஆனால், இதில் திருப்தி அடையாத உற்பத்தியாளர்கள், பால் கொள்முதல் விலையை (பசும் பால் லிட்டருக்கு ரூ.5, எருமைப் பால் ரூ.10 வரை) உயர்த்தக் கோரி, பால் உற்பத்தியாளர் கூட்டுறவு ஒன்றியங்கள் மாநிலம் முழுவதும் திங்கள்கிழமை (பிப்ரவரி 7) முதல் காலவரையற்ற உற்பத்தி நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக அறிவித்துள்ளன.
பால் கொள்முதல்- தடுத்தால் கடும் நடவடிக்கை: கடந்த நான்கரை ஆண்டுகளில் பால் கொள்முதல் விலையை லிட்டருக்கு பசுவின் பாலுக்கு கூடுதலாக ரூ.6.60 ஆகவும், எருமைப் பாலுக்கு ரூ.12.70 ஆகவும் அரசு உயர்த்தியுள்ளதாகத் தெரியவந்துள்ளது.
சட்டப் பேரவை தேர்தல் நெருங்கும் நிலையில், மீண்டும் கொள்முதல் விலையை உயர்த்தினால், பால் விலை மேலும் உயரக் கூடும். இதனால், பொதுமக்களின் அதிருப்திக்கு ஆளாக நேரும் என அரசு தயக்கம் காட்டி வருகிறது.
இந்நிலையில், அத்தியாவசியப் பொருளான பால் கொள்முதல் செய்வதைத் தடுத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அந்தந்த மாவட்ட நிர்வாகங்கள் மூலம் எச்சரிக்கப்பட்டுள்ளது. எனினும், சேலம் மாவட்டத்தில் பால் உற்பத்தியாளர்கள் போராட்டம் தீவிரமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தென் மாவட்டங்களில் இருந்து பால் கொள்முதல்: இதையடுத்து, திருநெல்வேலி, மதுரை உள்ளிட்ட பால் உற்பத்தியாளர் கூட்டுறவு ஒன்றியங்களில் இருந்து தேவையான அளவு பால் கொள்முதல் செய்ய ஆவின் நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது. இதையடுத்து, சென்னையில் ஆவின் பாலுக்கு தட்டுப்பாடு வராது என்று ஆவின் நிறுவன வட்டாரங்கள் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தன.
—————————————————————————————————
ஒரு அங்குல நிலம்கூட கொடுக்க மாட்டோம்: போஸ்கோ எதிர்ப்பு இயக்கம் அறிவிப்பு
First Published : 07 Feb 2011 02:17:33 AM IST தினமணி
பனாஜி, பிப். 6: ஒரிசா மாநிலத்தில் போஸ்கோ எஃகு ஆலை அமைய ஒரு அங்குல நிலம்கூடக் கொடுக்க மாட்டோம் என்று போஸ்கோ எதிர்ப்பு இயக்கத்தினர் அறிவித்துள்ளனர்.
மனித உரிமைகள் குறித்தும் ஊழலுக்கு எதிராகவும் கோவா மாநிலம் பனாஜியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற விவாத நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று போஸ்கோ பிரதிரோத் சங்கிரம் சமிதியின் தலைவர் அபய் சாஹு பேசியது: “மத்திய சுற்றுச் சூழல் அமைச்சகம் போஸ்கோ ஆலைக்கு அனுமதி அளித்துள்ளது. இதையடுத்து போஸ்கோ எதிர்ப்பு இயக்கத்துக்கு இக்கட்டான நிலை ஏற்பட்டுள்ளது.
இந்த ஆலையை அமைக்க சுற்றுச் சூழல் அமைச்சகம் சில கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அவை அனைத்தும் வெறும் கண்துடைப்புதான். தென்கொரிய நிறுவனத்துக்காக அரசே மக்களின் மீது அடக்கு முறையை ஏவி விடுகிறது.
இந்தத் திட்டத்துக்காக மாநில அரசு நில ஆர்ஜிதம் செய்யத் தயாராகி வருகிறது. எனினும் நாங்கள் எக்காரணம் கொண்டும் எங்களது ஒரு அங்குல நிலத்தைக் கூட ஆலை திட்டத்துக்காக வழங்க மாட்டோம்.
இந்த ஆலை அமைவதை எதிர்த்து கடந்த ஐந்தரை ஆண்டு காலமாக போராடி வருகிறோம். எங்கள் போராட்டத்தை எந்த சூழ்நிலையிலும் கைவிட மாட்டோம்’ என்றார் அவர்.
——————————————————————————————–
கொள்முதல் விலையை உயர்த்தக்கோரி பால் உற்பத்தியாளர்கள் இன்று வேலைநிறுத்தம்; மாடுகளுடன் சாலை மறியல்
Chennai திங்கட்கிழமை, பெப்ரவரி 07, 11:36 AM IST
முந்தைய பதிவுகள் 3 மாலைமலர்
இமெயில் பிரதி
சென்னை, பிப்.7-
தமிழ்நாடு முழுவதும் பால் உற்பத்தியாளர்கள் பசுப்பாலுக்கு ரூ.5, எருமைப் பாலுக்கு ரூ.5 கொள்முதல் விலையை உயர்த்தி வழங்க வேண்டும், பால் சங்க ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு, பணி நிரந்தரம், ஓய்வூதியம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பால் உற்பத்தியாளர்கள் வேலைநிறுத்தத்தில் இன்று ஈடுபட்டனர். கூட்டுறவு சங்கங்களுக்கு பால் வழங்காமல் அவற்றை சொந்த உபயோகத்துக்கு பயன்படுத்தினார்கள்.
சேலம், கிருஷ்ணகிரி, தர்மபுரி மாவட்டங்களில் பால் உற்பத்தியாளர்கள் கறவை மாடுகளுடன் போராட்டத்தில் ஈடுபட்டனர். கூட்டுறவு சங்கங்களுக்கு பால் ஊற்றவில்லை. மதுரை மாவட்டத்தில் நடந்த போராட்டத்தின்போது விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர். சேலம்-நாமக்கல் மாவட்டங்களில் ஸ்டிரைக்கால் பால் உற்பத்தி பாதிக்கப்பட்டது. பால் உற்பத்தியாளர் வேலை நிறுத்தத்தால் ஆலைக்கு பால் கொள்முதல் அளவு குறைந்தது. ஒருசிலர் மட்டுமே சொசைட்டிக்கு பாலை ஊற்றியதால் மிக குறைந்த அளவில் பால் கொள்முதல் செய்யப்பட்டன.
போலீஸ் பாதுகாப்புடன் ஆவினுக்கு பால் கொண்டு செல்லப்பட்டது. நீலகிரி மாவட்டத்திலும் பால் உற்பத்தியாளர்கள் வேலை நிறுத்தத்தில் பங்கேற்றதால் பால் ஊற்றவில்லை. மேலும் கோரிக்கையை வலியுறுத்தி பேரணி நடத்தினர். சேலம் மாவட்டம் ஆத்தூரில் விவசாயிகள் ஸ்டிரைக்கில் ஈடுபட்டதால் பால் சங்கங்கள் வெறிச்சோடி காணப்பட்டன. போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் பாலை தரையில் ஊற்றி னர். போராட்டம் குறித்து பால் உற்பத்தியாளர் நல சங்க மாநில தலைவர் செங்கோட்டுவேல் கூறுகையில், வேலை நிறுத்த போராட்டம் அதிகாலை 5 மணிக்கு தொடங்கியது. 80 சதவீத விவசாயிகள் சொசைட்டிகளுக்கு பால் வழங்கவில்லை.
பல்வேறு இடங்களில் போராட்டம் நடத்தி உள்ளனர். அரசு எங்கள் கோரிக்கையை நிறைவேற்றும் வரை போராட்டம் தொடரும் என்றார். தினமும் 20 லட்சம் லிட்டர் பால் உற்பத்தி செய்யப்படுகிறது. இதில் 10 லட்சம் லிட்டர் பால் சென்னைக்கு மட்டும் வினியோகிக்கப்படுகிறது. மற்ற மாவட்டங்களுக்கு 10 லட்சம் லிட்டர் பால் வழங்கப்படுகிறது. பால் உற்பத்தியாளர் போராட்டத்தால் சென்னை நீங்கலாக ஒருசில மாவட்டங்களில் பால் வினியோகம் இன்று சற்று பாதித்தது.
சென்னையில் வழக்கம் போல இன்று பால் சப்ளை செய்யப்பட்டது. இன்று கொள்முதல் செய்யப்படும் குளிரூட்டும் நிலையங்களில் பதப்படுத்தி பின்னர் சென்னைக்கு கொண்டு வரப்படும். நேற்றைய பால் இன்று தடையின்றி வினியோகம் செய்யப்பட்டது. சென்னையில் பால் தட்டுப்பாடு இன்று ஏற்படவில்லை. நாளை ஏற்பட வாய்ப்பு உள்ளது. இதுகுறித்து ஆவின் அதிகாரி கூறும்போது, பால் உற்பத்தியாளர்கள் போராட்டத்தால் பால் வினியோகம் இன்று பாதிக்காது. இதனுடைய பாதிப்பு நாளைதான் தெரியும்.
பால் எந்த அளவிற்கு கொள்முதல் செய்யப்பட்டு உள்ளது என்ற விவரமும் பிற்பகல் தெரியும். சென்னையில் பால் தட்டுப்பாடு ஏற்படாமல் வழங்க தகுந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வெளி மாவட்டங்களில் இருந்து பால் கொண்டு வரப்படுகிறது. மாநிலத்தின் மொத்த பால் உற்பத்தியில் 50 சதவீதம் சென்னை மக்களுக்கு வினியோகிக்கப்படுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
—————————————————————————————-
சட்டசபை வளாகத்தில் கள் விற்பனை தமிழ்நாடு கள் இயக்கம் முடிவு
பதிவு செய்த நாள் : பிப்ரவரி 07,2011,00:56 IST தினமலர்
கோவை: “தமிழக சட்டசபை வளாகத்தில் வரும் 10ம் தேதி கள் விற்பனை உறுதியாக நடக்கும்’ என, “தமிழ்நாடு கள் இயக்க’ ஆலோசனை கூட்டத்தில் நேற்று முடிவு செய்யப்பட்டது. தமிழ்நாடு கள் இயக்கத்தின் அவசர ஆலோசனைக் கூட்டம் கோவையில் நேற்று நடந்தது. கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கத் தலைவர் பழனிச்சாமி தலைமை வகித்தார். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: கள் இறக்குவதும்,பருகுவதும் அரசியல் சட்டம் மக்களுக்கு கொடுத்துள்ள உணவு தேடும் உரிமை. 108 நாடுகளில் கள் இறக்கவும், பருகவும் தடையில்லை. ஆனால், தமிழகத்தில் மட்டும் 23 ஆண்டுகளாக தடை நீடிக்கிறது. இத்தடையை தமிழக அரசு உடனடியாக நீக்க வேண்டும். தமிழக பட்ஜெட்டில் கள் இறக்கி விற்பது குறித்த அறிவிப்பு எதுவும் வெளியிடவில்லை. கள் இயக்கத்தின் கோரிக்கை உதாசீனப்படுத்தப்பட்டுள்ளதால், பட்ஜெட் கூட்டத்தொடரின் இறுதி நாளில் சட்டசபை வளாகத்தில், தமிழ்நாடு கள் இயக்கம் கள் விற்பனை செய்யும். தமிழ்நாடு கள் இயக்கத்தின் கொங்கு மண்டல அமைப்பாளர் ராமசாமி, வரும் 10ம் தேதி சுவைநீர்(கள்) விற்பனையை மேற்கொள்வார். இவ்வாறு பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் நல்லசாமி, மாநில அமைப்பாளர் கதிரேசன், பனை, தென்னை தொழிலாளர் சங்க மாநிலத் துணைத்தலைவர் முருகன் உட்பட பலர் பங்கேற்றனர்.
——————————————————————————————
பொதுவேட்பாளரை நிறுத்த விவசாயிகள் சங்கம் முடிவு
பதிவு செய்த நாள் : பிப்ரவரி 06,2011,02:18 IST தினமலர்
திருப்பூர் : விவசாயிகளின் பிரச்னைக்கு தீர்வு காண, தேர்தலில் பொது வேட்பாளர் நிறுத்த விவசாயிகள் சங்கம் முடிவு செய்துள்ளது.
கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்கத்தின் தலைவர் பழனிசாமி நிருபர்களிடம் கூறியதாவது: நொய்யலில் கலக்கும் சாயக்கழிவால் நிலம் பாதிக்கப்பட்டு சொந்த ஊரிலேயே விவசாயிகள் அகதிகளாக உள்ளனர். சுத்திகரிப்பு நிலையங்கள் முறையாக செயல்படுவதில்லை. இரவு நேரத்தில் சாயக்கழிவுகள் நொய்யலில் விடப்படுகிறது. திருப்பூர் தவிர கோவையிலிருந்தும் சாயக்கழிவு நொய்யலில் கலக்கிறது;20 ஆயிரம் கோடி ரூபாய் வருமானம், பல லட்சம் தொழிலாளர் பிரச்னை மேலும் விவசாயிகள் நலன் கருதி மத்திய மாநில அரசுகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். சாயக்கழிவு கடலில் கொண்டு சேர்ப்பது சாத்தியமானது.
“கள்’ இறக்கும் பிரச்னையில் விவசாயிகளின் போராட்டம் தொடரும்; பாலுக்கு உரிய விலை கொடுக்காமல், அரசு நிறுவனங்களை முடக்கி, தனியார் நிறுவனங்களை அரசு வளர்க்கிறது. வரும் 7ம் தேதி முதல் மாடுகளுக்கு உரிய தீவனம் வழங்காமல், பால் உற்பத்தியைக் குறைத்து, போராட்டம் நடத்தப்படும். சாய ஆலைப் பிரச்னை, “கள்’ பிரச்னை, பாலுக்கு உரிய விலை உள்ளிட்ட விவசாயிகள் பிரச்னைகளை முன்வைத்து வரும் சட்டசபை தேர்தலில் அனைத்து விவசாயிகள் அமைப்பு சார்பில் ஒரு தொகுதியில் பொது வேட்பாளர் நிறுத்தப்படுவார்; அதுகுறித்து ஆலோசிக்கப்படுகிறது, என்றார்.
———————————————————————————————
சாயக்கழிவை கடலில் சேர்ப்பது எளிதல்ல : செல்லமுத்து சொல்கிறார்
பதிவு செய்த நாள் : பிப்ரவரி 06,2011,02:14 IST தினமலர்
திருப்பூர் : சாயக்கழிவை கடலில் கொண்டு சேர்ப்பது எளிதல்ல. தங்களது வருவாயில் ஒரு சதவீதத்தை செலவிட்டால் சாயப்பட்டறைகளே இப்பிரச்னைக்கு தீர்வு காண முடியும் என, உழவர் உழைப்பாளர் கட்சியின் தலைவர் செல்லமுத்து தெரிவித்தார்.
மாநில தென்னை வாரிய தலைவரும், உழவர் உழைப்பாளர் கட்சி தலைவருமான செல்லமுத்து கூறியதாவது: கோவை, உடுமலையில் சினிமா செட் போட்டதால் குடிநீர் மாசுபட்டது. திருப்பூரில் சாயப் பட்டறைகளால் நொய்யல் நீர் மாசுபட்டுள்ளது. 30 ஆண்டுகளாக சாயக்கழிவால் நீர், மண், கால்நடை, விவசாயம் மற்றும் மனிதர்களுக்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கோர்ட் உத்தரவால் தற்போது பலன் கிடைத்துள்ளது. நான்கு லட்சம் தொழிலாளர்கள் குறித்து கவலைப்படுவோர் பல லட்சம் மக்கள் நலன் பற்றி கவலைப்படவில்லை. சாய ஆலைகள் தங்கள் வருவாயில் ஒரு சதவீதம் செலவிட்டால் போதும். இதற்கு அரசு உதவி தேவையில்லை.
சாயக்கழிவை கடலில் சேர்ப்பது எளிதல்ல; உடனே செய்து முடிக்கும் பணியும் அல்ல. இப்பிரச்னைக்கு தீர்வு காண விவசாயிகள், சாய ஆலைகள் மற்றும் அரசு அதிகாரிகள் கொண்ட முத்தரப்பு கமிட்டி அமைத்து, இரு தரப்பும் பாதிக்காத வகையில் ஒரு தீர்வு முடிவு செய்து, அதைக் கோர்ட்டில் சமர்ப்பித்து நடவடிக்கை எடுக்கலாம். வரும் சட்டசபை தேர்தலில் தி.மு.க., கூட்டணியில் உ.உ.க., உள்ளது; ஆறு தொகுதிகளை கேட்க உள்ளோம். “கள்’ குறிப்பிட்ட அளவு மரங்களில் இறக்க அனுமதிக்கலாம். இதற்கு உரிய வரி விதிப்பு செய்யலாம்.
——————————————————————————————–
சட்டசபைக்குள் கள் விற்பனை : கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் எச்சரிக்கை
பதிவு செய்த நாள் : பிப்ரவரி 04,2011,00:32 IST தினமலர்
திருப்பூர் : “”இன்று துவங்கும் சட்டசபை கூட்டத் தொடர் முடிவில், கள் இறக்க அனுமதி வழங்கவில்லை எனில், சட்டசபைக்குள் நுழைந்து கள் விற்போம்,” என, தமிழ்நாடு கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் நல்லசாமி தெரிவித்தார். திருப்பூரில், நிருபர்களிடம் கூறியதாவது: கள் இறக்குவது, அடுத்த கட்டப் போராட்டங்கள் குறித்த முடிவை அறிவிக்க, நிருபர்கள் சந்திப்பு கூட்டத்துக்கு, ஈரோட்டில் ஏற்பாடு செய்திருந்தோம்; போலீசார் அத்துமீறி என்னை கைது செய்தது, கண்டனத்துக்குரியது. கள் இறக்கியவர்கள் மீது, கோவை மாவட்டத்தில் மட்டுமே, போலீசாரால் பொய் வழக்கு போடப்பட்டுள்ளது. கள் பானைகளை உடைத்து, விவசாயிகளுக்கு சேதத்தை ஏற்படுத்தியுள்ளனர். இதைக் கண்டித்து, கள் இயக்கத்தினர், கோவை கண்ணம்பாளையத்தில், கடந்த 1ம் தேதி முதல் உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர்; வழக்குகளை திரும்பப் பெறும் வரை, உண்ணாவிரதம் தொடரும். கள் இறக்குவோரை, “கொசுக்களை நசுக்குவதை போல் நசுக்குவோம்’ என, மேற்கு மண்டல ஐ.ஜி., தெரிவித்து, விவசாயிகளை அவமானப்படுத்தி உள்ளார்.
கள் இயக்கத்துடன், மேற்கு மண்டல ஐ.ஜி., பேச்சு நடத்த வேண்டும்; அவர் தரப்பு நியாயத்தை நிலை நாட்டினால், எங்கள் கோரிக்கை மற்றும் போராட்டத்தை கைவிடுகிறோம். அவர் மட்டுமின்றி, வேறு யாரும், “ஆல்கஹால் கலந்த மதுபானத்தை போன்று, கள் ஒரு மதுபானம் தான்; உணவுப் பொருள் அல்ல’ என நிரூபித்தால், போராட்டத்தை கைவிட தயார்.
சட்டசபை கூட்டத் தொடரில், நல்ல முடிவை அறிவிக்காமல், கள் இயக்கத்தை ஏமாற்றினால், கூட்டத்தொடர் முடியும் நாளில், சட்டசபைக்குள் கள் விற்பனை செய்வோம்; அதற்காக, சென்னை மாநகராட்சி போலீசாரிடம் அனுமதியும் பெற உள்ளோம். அறிவிப்பு வெளியிடாமல், அடுத்தகட்ட தேர்தலுக்கு தி.மு.க., தயாரானால், தி.மு.க., தலைவர் கருணாநிதி எங்கு போட்டியிட்டாலும், அவரை தோற்கடிக்கும் நடவடிக்கையில் ஈடுபடுவோம்.இவ்வாறு, நல்லசாமி தெரிவித்தார்.
——————————————————————————————
பேரவை கூட்டத் தொடர் இறுதி நாளில் சுவைநீர் விற்பனை
First Published : 04 Feb 2011 09:44:51 AM IST தினமணி
திருப்பூர், பிப்.3: தமிழகத்தில் கள் இறக்கி விற்க சட்டப் பேரவைக் கூட்டத்தில் எவ்வித அறிவிப்பும் வெளியிடப்படாதபட்சத்தில் இறுதி நாள் கூட்டத்தில் சுவைநீர் விற்பனை செய்யப்படும். அதற்கான போலீஸ் அனுமதி பெறப்பட்டுள்ளது என்று தமிழ்நாடு கள் இயக்கம் தெரிவித்துள்ளது.
இது குறித்து அவ்வியக்க ஒருங்கிணைப்பாளர் செ.நல்லசாமி திருப்பூரில் செய்தியாளர் களிடம் கூறியது: தமிழகத்தில் கள் இறக்கி விற்க தொடர்ந்து அனுமதி மறுக்கப்படுகிறது. தவிர, கள் இறக்க அனுமதி கோரி போராட்டத்தில் ஈடுபடுவோர் மீதும் பல்வேறு குற்ற நடவடிக்கைகள் பதிவு செய்யப்படுகின்றன. அதன்படி, கோவை மாவட்டத்தில் கள் இறக்கியோர் மீது காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் கண்ணம்பாளையத்தில் கள் இயக்கம் துவங்கியுள்ள காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டம் வழக்கை திரும்பப் பெரும் வரை தொடரும்.
கள்ளுக்கு விதித்திருக்கும் தடையை நீக்கிடக்கோரி தமிழ்நாடு கள் இயக்கம் கடந்த 6 ஆண்டாக போராடி வருகிறது. அதனடிப்படையில், வரும் சட்டப்பேரவை கூட்டத் தொடரில் கள் இறக்கி விற்பது தொடர்பாக முக்கிய அறிவிப்பு வெளியிடப்படும் என எதிர்பார்க்கிறோம். அவ்வாறான அறிவிப்பு வராதபட்சத்தில் கூட்டத் தொடரின் இறுதி நாளில் சட்டப் பேரவையில் சுவை நீர் (புளிக்காத கள்) விற்பனை செய்யப்படும். அதற்கு, சென்னை மாநகர காவல் ஆணையரிடம் அனுமதி பெறப்பட்டுள்ளது. தவிர, வரும் சட்டப்பேரவை தேர்தலில் முதல்வர் கருணாநிதி போட்டியிடும் தொகுதியில் அவரை எதிர்த்து கள் இயக்கம் பிரசாரத்தில் ஈடுபட்ட தோற்கடிப்போம்.
கடந்த ஜனவரி மாதம் ஆளுநர் உரையில் அனைத்து காதி கிராம தொழிற்சங்கங்களிலும் பனை, தென்னையிலிருந்து பெறப்பட்ட சுவை நீர் விற்கப்படும் என்று கூறப்பட்டது. அந்த சுவை நீர் என்ன என்பதை அரசு விளக்கமளிக்க வேண்டும். துவக்கத்தில் கள் இயக்கத்துக்கு ஆதரவு தெரிவித்து கொமுக போராட்டத்தில் பங்கெடுத்தது. தற்போது தேர்தல் நெருங்கி வருவதால் கூட்டணியை எதிர்பார்த்து கள் இயக்கத்துக்கான ஆதரவிலிருந்து பின் வாங்கியுள்ளது என்றார்.
———————————————————————————-
கள் இயக்கம் தொடர் உண்ணாவிரதம்
கள் உற்பத்தியாளர்கள் விவசாயிகள் தொழிலாளர்கள் நுகர்வோர்கள் மீதான பொய்வழக்கு போடுதல் போன்ற அடக்கு முறையை கண்டித்தும், கள் இயக்க கோரிக்கைகளை அரசு உடனே நிறைவேற்ற வேண்டியும் 1.2.2011 முதல் தொடர் உண்ணாவிரத அறப்போராட்டம்.
இடம் – கண்ணம்பாளையம் . திருச்சி சாலை, கோயமுத்தூர்.
கலந்துகொண்டோர் – உழவர் காவலன்
N.S.பழனிசாமி M.A. Ex. M.L.A.,
தலைவர். கட்சிசார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கம்.
வழக்கறிஞர் செ.நல்லசாமி M.A.B.L.
தமிழ்நாடு கள்இயக்க ஒருங்கிணைப்பாளர்.
உடுமலை வேலாயுதம் B.Sc (Ag) தலைவர், தமிழ்நாடு விவசாய விழிப்புணர்வு இயக்கம்.
மருத்துவர்.தங்கராஜ். M.B.B.S. DCH.
கோவைமாநகர் மாவட்டத்தலைவர்
K.K.சந்திரசேகர்
கோவை மாவட்ட இளைஞர் அணித்தலைவர்
பூராண்டாம்பாளையம். மணி
மாவட்ட இளைஞர் அணிச்செயலாளர்
வேலுசாமி அவினாசி
K.P.சண்முகசுந்தரம்
திருப்பூர் மாவட்ட தென்னை விவசாயிகள் சங்கத்தலைவர்
C.P.ஈஸ்வரன்
திருப்பூர் மாவட்ட தென்னை விவசாயிகள் சங்கசெயலாளர்
R. திருஞானசம்பந்தம் வழக்கறிஞர்
R. லட்சுமி நாராயணன் வழக்கறிஞர்
M.செல்வராஜ் தலைவர் சட்ட விழிப்புணர்வு இயக்கம்.
கானூர் அருணாசலம்.
மற்றும் 60 க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.
1.2.2011
——————————————————————————————————–
கோயம்புத்தூர்
கள் இயக்கத்தினர் ஆர்ப்பாட்டம்: 66 பேர் கைது
First Published : 01 Feb 2011 10:34:43 AM IST தினமணி
கோவை, ஜன. 31: கள் இறக்கும் போராட்டத்தில் கைது செய்யப்பட்ட விவசாயிகளை விடுதலை செய்யக் கோரி திங்கள்கிழமை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 66 பேர் கைதுசெய்யப்பட்டனர்.
கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை மக்கள் குறை
தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. அப்போது, கள் இயக்கத்தை சேர்ந்த விவசாயிகள் ஆட்சியர் அலுவலகம் முன்பாக ஆர்ப்பாடத்தில் ஈடுபட்டனர்.
கள் இறக்கும் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் மீது பொய் வழக்கு போடுவதைக் கண்டித்தும், சிறையில் அடைக்கப்பட்ட விவசாயிகள், மரம் ஏறும் தொழிலாளர்களை விடுதலை செய்யக் கோரியும் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தினர் .
கள் இயக்கத்தின் கோவை மாவட்டத் தலைவர் ஏ.கே.சண்முகத்தை கைது செய்து சிறையில் அடைத்ததால், அவர் உண்ணாவிதரம் இருக்கிறார். அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவரை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக 66 பேரை ரேஸ்கோர்ஸ் போலீஸôர் கைது செய்தனர். மாலையில் அவர்கள் அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.
———————————————————————————————–
லாபமற்ற தொழிலாகிறது விவசாயம்:வேளாண் துறை செயலர் கவலை
கோவை: “”விவசாயம் லாபமற்ற தொழிலாக மாறிவருகிறது. பெரும்பாலான விவசாயிகள், விவசாயத்தை விட்டு வெளியேறிவிட்டனர்,” என, மத்திய வேளாண் துறை முதன்மை செயலர் ராம மோகன் ராவ் பேசினார். தமிழ்நாடு வேளாண் பல்கலையில் மூன்று நாட்கள் தொடர்ந்து நடக்கும், வேளாண் உயிரி தொழில் நுட்ப மாநாடு நேற்று துவங்கியது. மத்திய வேளாண் துறை முதன்மை செயலர் ராம மோகன் ராவ் பேசியதாவது: நம்நாட்டில் பயிர் சாகுபடி பரப்பளவு குறைந்து வருகிறது. சாகுபடி வளங்களும் வேளாண் உற்பத்தியும் குறைந்துள்ளது. இதை சரிப்படுத்த வேளாண் தொழில்நுட் பம் அவசியம். உற்பத்தியை பல மடங்கு பெருக்குவதற்கும், உயிரியியல் தொழில்நுட்ப முறைகளை பெருக்குவது அவசியம். தமிழகம் நீர் பற்றாக்குறை உடைய மாநிலம். ஆறுகளின் வாயிலாக கிடைக்கும் நீர் வரத்து மிகக்குறைவு. தமிழகத்தில் நிலத்தடி நீரை 90 சதவீதத்துக்கும் அதிகமாக பயன்படுத்தி விட்டோம். நிலத்தடி நீர் மட்டம் வெகுவாக குறைந்து வருகிறது. நிலப்பரப்பில் 50 சதவீத அளவுக்கு மட்டுமே பாசன வசதியுடன் உள்ளது. 50 சதவீத பகுதி பாசன வசதி இல்லாமல் உள்ளது. இத்தருணத்தில் நாம் தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும். அதற்குரிய தொழில்நுட்பத்தை பயன் படுத்திக்கொள்ள வேண்டும். வறட்சி மற்றும் வெள்ளம் போன்றவற்றை தாங்கி வளரும் புதிய வகையிலான பயிர் ரகங்கள் நமக்கு தேவைப்படுகிறது. புதிய ரகங்களை உருவாக்குவது, தரமான விதைகளை உயிரி தொழில் நுட்பத்தை பின்பற்றி உற்பத்தி செய்ய வேண்டும். பாரம்பரிய பயிர் ரகங்கள் வறட்சி, பூச்சிநோய் தொல்லைகளை தாங்கி வளர் பவை. அவை மறைந்து வருகின்றன. தற்போது ஒரு சில ரகங்கள் கூட புழக்கத்தில் இல்லை. பாரம்பரிய பயிர் களை, நல்ல குணாதிசியங்களை கொண்ட உயிரி தொழில்நுட்பம் மூலம் நாம் உற்பத்தி செய்யலாம். அதன் மூலம் உயர்விளைச்சளை கொடுக்கும் வீரிய ஒட்டு ரகங்களை உருவாக்க வேண்டும். விவசாயம் லாபமற்ற தொழிலாக மாறிவருகிறது. பெரும்பாலான விவசாயிகள், விவசாயத்தை விட்டு வெளியேறிவிட்டனர். அதனால் நிறைய விவசாய நிலம் தரிசாகவே உள்ளது. 40 வயதுடைய இளம் விவசாயிகளை காண முடிவதில்லை. பெரும்பாலான இளைஞர்கள் விவசாய தொழில் மேற்கொள்ள வேண்டும். இதன் மூலம் விவசாயம் லாபகரமான தொழிலாக மாறவேண்டும். உயிரியியல் தொழில்நுட்பம் உதவ வேண்டும்.விவசாயத்தில் தொழில்முனைவோரை உருவாக்க வேண்டும். அதற்கு உயிரி தொழில் நுட்பம் பயனுள்ளதாக இருக்கும். இவ்வாறு, மத்திய வேளாண் துறை முதன்மை செயலர் ராம மோகன் ராவ் பேசினார். இம்மாநாடு தொடர்ந்து இன்றும், நாளையும் நடக்கிறது. இதில் வேளாண் பல்கலை துணை வேந்தர் முருகேசபூபதி, அமெரிக்காவிலுள்ள எம்.ஐ.பி.ஆர்.டி., அமைப்பு தலைவர் ராஜன்நடராஜன், ஐதராபாத்திலுள்ள சர்வதேச மிதவெப்ப பகுதிக்கான பயிர் ஆராய்ச்சி நிறுவன தலைமை செயல் அதிகாரி கிரிசர்மா உள்ளிட்ட ஆறு பேருக்கு வேளாண் வளர்ச்சிப்பணியில் தொலைநோக்குப்பார்வையில் சிறந்த தலைமையாக செயல்பட்டதற்காக எம்.ஐ.பி. ஆர்.டி., விருதுகள் வழங்கப்பட்டது.
தினமலர்–31.1.2011
——————————————————————————————————–
கள் இறக்கிய மூவர் கைது
பல்லடம் : பல்லடம் அருகே உள்ள குள்ளம்பாளையத்தைச் சேர்ந்த சுந்தரரங்கசாமி (30), ஈஸ்வரமூர்த்தி(35). மரம் ஏறும் தொழிலாளி பாபு (40) ஆகியோர் தென்னை மரத்தில் இருந்து “கள்’ இறக்கி விற்றதாக, பொள்ளாச்சி மதுவிலக்கு போலீசார் நேற்று கைது செய்தனர். அப்பகுதி விவசாயிகள் போலீசாரிடம் கடும் எதிர்ப்பு தெரிவித் தனர். இருப்பினும் அம்மூவரையும் மதுவிலக்கு போலீசார் பல்லடம் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். அவர்கள் உடனடியாக கோர்ட் ஜாமீனில் வெளியே வந்தனர்.
தினமலர் –30.1.2011
——————————————————————————————————
தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் ஆர்ப்பாட்டம்
உடுமலை : மக்காச்சோள விலை வீழ்ச்சியை தடுக்க, அரசு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில், உடுமலை ஆர்.டி.ஓ., அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. மக்காச்சோள சாகுபடியில், செலவு பல மடங்கு உயர்ந்துள்ளது. அறுவடை சமயத்தில் விலை குறைவதால் விவசாயிகள் பாதிக்கப்படுகின்றனர்; குவிண்டாலுக்கு 1,500 ரூபாய் விலையை அரசே நிர்ணயிக்க வேண்டும். பால் உற்பத்தியாளர்கள் பாதிப்பதை தடுக்க, பால் லிட்டருக்கு 22 ரூபாய் நிர்ணயிக்க வேண்டும் என்பன உட்பட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. தாலுகா தலைவர் ராஜகோபால் தலைமை வகித்தார். மாவட்ட தலைவர் மோகன் முன்னிலை வகித்தார். தாலுகா கமிட்டி உறுப்பினர் விஜயகுமார் நன்றி தெரிவித்தார்.
தினமலர்–28.1.11
——————————————————————————————————–
ஒரு மடை விட்டு ஒரு மடை தண்ணீர் திட்டம்; மாற்றியமைக்க ஆலோசனை
பொங்கலூர் : பி.ஏ.பி., திட்டத்தில் ஒரு மடை விட்டு ஒரு மடை தண்ணீர் வழங்கும் திட்டத்தை மாற்றி அமைக்க, விவசாயிகள் மற்றும் அதிகாரிகள் பங்கேற்ற கலந்தாய்வு கூட்டம், பொங்கலூர் பி.ஏ.பி., விருந்தினர் மாளிகையில் நேற்று நடந்தது. பொள்ளாச்சி செயற்பொறியாளர் தங்கவேல் தலைமை வகித்தார். பொங்கலூர் உதவி செயற்பொறியாளர் முருகேஷ் வரவேற்றார். பல்லடம் பகிர்மானக்குழு தலைவர் சாமியப்பன், பொங்கலூர் பகிர்மானக்குழு தலைவர் கோபால் முன்னிலை வகித்தனர். பங்கேற்ற விவசாயிகளில் பலரும், “மதகுகளில் குறைந்தளவு தண்ணீர் வருகிறது. தண்ணீர் வரும் குழாய்களை மாற்ற வேண்டும். மெயின் கால்வாயில் இருந்து அதிகமாக தண்ணீர் எடுக்க வேண்டும். மொத்த பகுதிக்கும் சொட்டு நீர் பாசனம் அமைத்து ஆண்டு முழுவதும் தண்ணீர் விட வேண்டும்,’ என்றனர். பாசன சபை தலைவர்கள் கூறுகையில், “உதவி செயற்பொறியாளரிடம் மட்டுமே தண்ணீர் அளவை அதிகரிக்குமாறு கேட்போம். அவரே முழு பொறுப்பேற்க வேண்டும். கால்வாய்களை பராமரிக்க பாசன சபைக்கு அரசு நிதி ஒதுக்க வேண்டும்; காண்டூர் கால்வாயை சர்வதேச தரத்தில் அமைக்க வேண்டும்; 400 ஏக்கர் வரையுள்ள பகுதிக்கு ஒரு மடை விட்டு ஒரு மடை பாசனம் வழங்க வேண்டும். விவசாய வேலைக்கு நூறு நாள் வேலை திட்ட பயனாளிகளை பயன்படுத்த வேண்டும்,’ என்றனர். திட்டக்குழு தலைவர் பரமசிவம் பேசியதாவது:தமிழகத்தில் ஒன்பது திட்டக்குழுக்கள் உள்ளன; பி.ஏ.பி., திட்டக்குழுவை உலக வங்கி பாராட்டியுள்ளது. திட்டக்குழுவின் கீழ் பகிர்மானக்குழு, பாசனக்குழுக்குள் செயல்படுகின்றன. கடந்த காலத்தில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்ட போது, ஒரு மடை விட்டு ஒரு மடை தண்ணீர் விடுமாறு கேட்டோம். அரசு பரிசீலனையில், 1,000 ஏக்கருக்கு அதிகம் இருக்கும் பகுதியில் திட்டம் செயல்படுத்தப்பட்டது. தற்போது 400 ஏக்கர் வரை உள்ள பகுதிக்கு ஒரு மடை விட்டு ஒரு மடை தண்ணீர் விடுமாறு கேட்கிறோம். இத்திட்டத்தை கொண்டு வந்தால், சிறப்பாக செயல்படுத்த முடியும். ஒவ்வொரு ஆண்டும் 130 கி.மீ., தூரம் தண்ணீர் கொண்டு வரப்பட்டு, இரண்டு லட்சம் ஏக்கர் பாசனம் செய்யப்படுகிறது. பி.ஏ.பி., திட்டம் பாத்தி கட்டி, வாய்க்கால் மூலம் நீர் பாய்ச்ச அமைக்கப்பட்டது. நம்மால் அவ்வாறு செய்ய முடிவதில்லை. இதனால், தண்ணீர் பற்றாக்குறை உள்ளது, என்றார். பொள்ளாச்சி செயற்பொறியாளர் தங்கவேல் பேசுகையில், “”தற்போதைய ஐந்து சுற்று பாசன முறையில் 90 சதவீதம் நன்றாக உள்ளது. ஒரு மடை விட்டு ஒரு மடை விடும் பாசன திட்டத்தை, 1,000 ஏக்கரில் இருந்து 400 ஏக்கராக மாற்றுவதற்கான சாத்தியக் கூறுகளை ஆய்வு செய்து அரசுக்கு அறிக்கை அனுப்புகிறோம். மக்கள் சில இடங்களில் வாய்க்காலை திறந்தவெளி கழிப்பிடமாகவே பயன்படுத்துகின்றனர். தண்ணீர் வராதபோது யாரும் கண்டுகொள்வதில்லை. வாய்க்காலை பாதுகாக்க வேண்டும்,” என்றார். சுல்தான் பேட்டை பகிர்மானக்குழு தலைவர் ராஜகோபால், உடுமலை செயற்பொறியாளர் பன்னீர்செல்வம், கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்க தலைவர் பழனிசாமி, பாசன சபை தலைவர்கள், விவசாயிகள் பங்கேற்றனர்.
தினமலர்–28.1.11
—————————————————————————————————
உழவர் காவலன் N.S.பழனிசாமி M.A. Ex. M.L.A., — அறிவிப்பு
உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடு அவர்களின் 88 வது பிறந்த தினம் 6.2.2011 ஞாயிறு காலை 10.௦௦௦00 மணியளவில் கோவை செஞ்சிலுவை சங்கம் அருகில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம் .
முழு விவரம் –உழவர் காவலன் N.S.பழனிசாமி M.A. Ex. M.L.A., -ல் உள்ளது .
22.1.2011
—————————————————————————————————–
கள் விற்பனை மையங்களை அமைக்க வேண்டும் – சரத்குமார்
ஈரோடு, ஜன. 21: கள்ளை கொள்முதல் செய்து, விற்பனை செய்ய அரசே மையங்களை அமைக்க வேண்டும் என்று சமத்துவ மக்கள் கட்சித் தலைவரும், நடிகருமான சரத்குமார் தெரிவித்தார்.
கள் இயக்கம் சார்பில் நடைபெற்ற கள் இறக்கும் போராட்டதுக்கு ஆதரவு தெரிவிப்பதற்காக ஈரோடு மாவட்டம், அரச்சலூருக்கு வெள்ளிக்கிழமை வந்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியது:
1967-ல் அண்ணா முதல்வராகப் பதவி ஏற்றபோது, “பூரண மதுவிலக்குதான் எங்கள் கொள்கை. மதுக் கடைகளை திறந்தால்தான் அரசுக்கு வருமானம் கிடைக்கும் என்றால், எனக்கு இந்தப் பதவி தேவையில்லை’என்றார்.
ஆனால், தற்போது அரசே மதுக் கடைகளை நடத்துகிறது. அங்கு பல வகையான மது விற்கப்படுகிறது. அந்த மது வகைகளை விட, கள்ளில் குறைந்த அளவுதான் ஆல்கஹால் உள்ளது.
பால் கொள்முதல் செய்ய கூட்டுறவு சங்கங்களை அமைத்துள்ளதுபோல், கள் கொள்முதல் மையத்தை ஏற்படுத்தி, டின் மற்றும் கேன்களில் அடைத்து கள்ளை விற்பனை செய்ய வேண்டும்.
கள் இறக்க அனுமதி வழங்கினால் தென்னை மற்றும் பனை மரம் ஏறும் 10 லட்சம் தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளின் குடும்பங்கள் வளம் பெறும்.
பூரண மதுவிலக்கை அமல்படுத்தும் வரை, கள் இறக்க அனுமதி அளிக்க வேண்டும். மதுக் கடைகளை மூடினால் கள்ளச் சாராய விற்பனை அதிகரித்துவிடும் என்று கூறுவதை ஏற்க முடியாது. அரசால் எதையும் கட்டுப்படுத்த முடியும்.
22.1.2011 – தினமணி
———————————————————————————————————
தடையை மீறி இன்று கள் விற்பனை
ஈரோடு: “”அறச்சலூரில் இன்று திட்டமிட்டபடி கள் விற்பனை துவங்கும்,” என கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் நல்லசாமி கூறினார்.
அவர் கூறியதாவது: தமிழகத்தில் முழுமையான மதுவிலக்கு சட்டம் இல்லை. இங்கு அறிவியல் பூர்வமான ஊழல்தான் செய்கின்றனர். இட்லி, தோசையில் கூட மூன்று முதல் நான்கு சதவீதம் ஆல்கஹால் உள்ளது. பழங்காலத்தில் தினையிலிருந்து கள் எடுத்தனர். கள் இறக்குவதும், விற்பதும் உணவு தேடும் உரிமை, இச்சட்டத்தின்படி, அரச்சலூரில் இன்று நடக்கும் கள் இறக்கி விற்பனை துவங்கும்.
கள் விற்பனை துவக்க விழாவுக்கு பாதுகாப்பு கேட்டு, ஜனவரி 21ம் தேதி, எஸ்.பி., ஜெயச்சந்திரனுக்கு கடிதம் அனுப்பினேன். இதற்கு பதிலனுப்பிய எஸ்.பி., “தமிழக மதுவிலக்கு சட்டம் 1937 பிரிவு மற்றும் உட்பிரிவு (1-டி), (ஈ)ன்படி, யாரேனும் கள் இறக்கினாலோ அல்லது தன் வசம் கள் வைத்திருந்தாலோ அது தண்டனைக்குரியது. இந்திய காவல் சட்டம் 1861, பிரிவு 30(2)ன் சரத்துக்கள் பெருந்துறை காவல் உட்கோட்டப்பகுதியில் தற்போது, அமலில் உள்ளது. தமிழ்நாடு மதுவிலக்கு சட்டம் 1937க்கு முரண்பாடானது என்பதால், கள் இறக்கி விற்க பல்வேறு தரப்பினர் அறச்சலூரில் 21ம் தேதி ஒன்று திரண்டாலும் சட்டம் ஒழுங்கு மற்றும் பொது அமைதிக்கு குந்தகம் ஏற்பட வாய்ப்புள்ளது. இப்போராட்டத்துக்கு அனுமதியும், பாதுகாப்பும் வழங்க இயலாது’ என, கூறியுள்ளார்.
நாங்கள் போராட்டத்துக்கு அனுமதி கேட்கவில்லை; அதிக மக்கள் கூட்டம் வருவர் என்பதால், பாதுகாப்புதான் கேட்டோம். நாங்கள் சட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டுகிறோம். போலீஸார் கைது செய்தாலும் போராட்டத்தை நடத்துவோம். சென்னை வந்த ராகுல்காந்தியை சந்தித்து, இப்பிரச்னை குறித்து கூறினோம். அவரும் சம்மதித்து, மத்திய அமைச்சர் ஒருவரை அனுப்புவதாக கூறினார். ஆனால் அதன் பின் தகவல் ஏதும் இல்லை. அறச்சலூரில் இன்று காலை 10.30க்கு கள் விற்பனை துவக்கப்படுகிறது. ஈரோடு எம்.பி., கணேசமூர்த்தி, பா.ஜ., கோவை முன்னாள் எம்.பி., ராதாகிருஷ்ணன், முன்னாள் மத்திய அமைச்சர் இளங்கோவன், எம்.எல்.ஏ., வசந்தகுமார், இயற்கை விஞ்ஞானி நம்மாழ்வார், இந்து மக்கள் கட்சி அர்ஜூன் சம்பத் உள்பட பலர் பங்கேற்கின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.
தினமலர்- 21.1.2011
——————————————————————————————————–
10 ஆண்டுகளில் விவசாயத்தை கை கழுவியவர்கள் 70 லட்சம் பேர்
விவசாய தொழிலை மேம்படுத்த மத்திய, மாநில அரசுகள் ஆண்டுதோறும் பட்ஜெட்டில் ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் நிதி ஒதுக்கி, மழை வெள்ளம், வறட்சி போன்ற பாதிப்புகளுக்கு நிவாரணம் கொடுத்து வரும் நிலையில், கடந்த 10 ஆண்டுகளில் 70 லட்சம் பேர் விவசாய தொழிலை விட்டு, வேறு தொழில்களுக்கு சென்றுவிட்டதாகவும், கடன் தொல்லையால் மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம், ஆந்திர பிரதேசம், கர்நாடகா மற்றும் சத்திஸ்கர் போன்ற மாநிலங்களில், இரண்டு லட்சம் விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டதாகவும் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
நாட்டில் உள்ள 70 சதவீதத்திற்கும் அதிகமானவர்கள் விவசாயம் மற்றும் அதை சார்ந்த தொழில்களையே நம்பி உள்ளனர். இதனாலேயே, சுதந்திரம் அடைந்ததில் இருந்து, விவசாய தொழிலை முன்னேற்ற ஒவ்வொரு ஐந்தாண்டு திட்டங்களிலும், மத்திய அரசு ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்கிறது.மாநில அரசுகளும், விவசாயிகளுக்கு பயிர் செய்யவும், உழவு கருவிகள் வாங்கவும் கடன் உதவிகளை வழங்கி வருகின்றன. உரம், பூச்சி மருந்து பொருட்கள் மானிய விலையில் கொடுக்கின்றன. வெள்ளம், வறட்சி போன்ற காலங்களில் கடன் ரத்து செய்யப்படுகின்றன.கடன் உதவிகள், மானியம் போன்றவை கிடைத்தாலும் விவசாயம் செய்வது எளிதான செயலாக இல்லை. எதிர்பாராமல் திடீரென பெய்யும் பெரும் மழை, பயிர் செய்ய முடியாத அளவிற்கு கடும் வறட்சி, பனி போன்றவை விவசாயிகளை அவ்வப்போது பதம்பார்த்து வருகின்றன. இதனால், இந்த ஆண்டு சிறப்பான மகசூல் கிடைக்கும் என்று, எந்த விவசாயியும் எதிர்பார்ப்புடன் இருக்க முடியாத நிலை உள்ளது.
இதனால், வாங்கிய கடனையும் சரியான தவணைகளில் கட்ட முடிவதில்லை. விவசாயிகளுக்கு கடன் உதவி வழங்கினாலும், அதை பெறுவதற்கு சிபாரிசு, கடன் வழங்கும் அதிகாரிக்கு லஞ்சம் என்று கொடுக்க வேண்டியுள்ளதால், கடன் தொகை முழுவதும் விவசாயிக்கு கிடைக்க முடியாத நிலை உள்ளது.இதனால், தனியாரிடம் அதிக வட்டிக்கு கடன் வாங்க வேண்டியுள்ளது. கடனுக்கு வட்டி கட்ட முடியாமலும், கடன் சுமை அதிகரித்து ஏராளமான விவசாயிகள் பெரும் துன்பத்திற்கு ஆளாகின்றனர்.கடன் தொல்லையால் பாதிக்கப்பட்ட விவசாயிகள், கடனை கட்ட முடியாமல் தன்மானம், கவுரவம் கருதி தற்கொலை செய்து கொள்கின்றனர். கடந்த 10 ஆண்டுகளில், மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம், ஆந்திர பிரதேசம், கர்நாடகா மற்றும் சத்திஸ்கர் போன்ற மாநிலங்களில், கடன் தொல்லை காரணமாக தற்கொலை செய்து கொண்ட விவசாயிகளின் எண்ணிக்கை இரண்டு லட்சத்திற்கும் அதிகம்.விவசாய தொழிலில் கூலி குறைவாக இருப்பதால், கடந்த 10 ஆண்டுகளில் 70 லட்சம் பேர் விவசாயத்தை கைவிட்டு, வேறு தொழில்களுக்கு சென்று விட்டனர்.
இது குறித்து விவசாய சங்கங்களை சேர்ந்தவர்களை கேட்டபோது, “விவசாய பட்டப்படிப்பு படித்து வேலை இல்லாத விவசாய பட்டதாரிகளை கிராமங்களுக்கு அனுப்பி, விவசாயத்துறையில் ஏற்பட்டுள்ள நவீன விவசாய தொழில் முன்னேற்றங்கள் குறித்து, விவசாயிகளிடம் எடுத்துக்கூறி விவசாயத்தை வளர்க்க அரசு உதவ வேண்டும். அடுத்து வரும் ஆண்டுகளில், உலகில் விவசாய உற்பத்தி குறையும் என்று வல்லுனர்கள் மதிப்பிட்டுள்ளனர்.கடந்த ஆண்டு பெய்த கனமழை காரணாக வெங்காயம், தக்காளி போன்ற பொருட்கள் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளதால், அவற்றின் விலை எப்போதும் இல்லாத அளவிற்கு உயர்ந்து விட்டன. இதனால் மத்திய, மாநில அரசுகளுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
“கடன் தள்ளுபடி’ திட்டம் கண்துடைப்பு : மத்திய, மாநில அரசுகள் விவசாய கடனை தள்ளுபடி செய்து வந்தாலும் அதன் பலன், ஏராளமான ஏழை விவசாயிகளுக்கு கிடைப்பதில்லை. கடன் தள்ளுபடியை விட, பயிர் காப்பீடு திட்டத்தை அதிகரித்தால் பலன் கிடைக்கும். இந்த திட்டம் வெகுவாக நடைமுறையில் இல்லாததால், அதிக மழை, வறட்சி, பனிப்பொழிவு, புயல், பூச்சி தாக்குதல், நோய் போன்ற காரணங்களால் நஷ்டம் ஏற்பட்டு, விவசாய தொழில் முடங்கிப் போய் விடுகிறது. இதனால், விவசாயிகளுக்கு மட்டும் இல்லாமல் நாட்டிற்கும் நஷ்டம் ஏற்படுகிறது.பயிர் காப்பீட்டு திட்டத்தை முழுமையாக செயல்படுத்தினால், பாதிக்கப்படும் விவசாயிகளுக்கு எளிதாக நிவாரணம் கிடைக்கும். இதனால், விவசாயி தொடர்ந்து நம்பிக்கையுடன் விவசாயத்தை மேற்கொள்ள வழி ஏற்படும்.
தினமலர்-18.1.2011
——————————————————————————————————
கள் இறக்கும் போராட்டம் :கள் இயக்கத்தினர் ஆலோசனை
தாராபுரம்: தமிழ்நாடு கள் இயக்கம் ஆலோசனைக் கூட்டம், தாராபுரத்தில் நடந்தது. தமிழ்நாடு கள் இயக்க மாநில கள ஒருங்கிணைப்பாளர் நல்லசாமி கூறியதாவது: சட்டசபை கூட்டத்தொடரில் கடந்த 7ம் தேதி கவர்னர் பர்னாலா, தனது உரையில், “சுவைநீர்’ கடைகளில் விற்கப்படும் என கூறியது கள்ளா; பதனீரா என்பது மக்களுக்கு புரியும் வகையில் அறிவிக்க வேண்டும். ஈரோடு அறச்சலூரில் 21ம் தேதி காலை 11.00 மணிக்கு கள் இறக்கி விற்கும், அரசியல் அமைப்பு சட்ட உரிமை மீட்பு அறப்போராட்டத்தில் 2,000 பேர் பங்கேற்கின்றனர். பால் உற்பத்தியாளருக்கு அவ்வப்போது விலை உயர்த்தப்படுவதுபோல், 23 ஆண்டுகளாக கள் மீதுள்ள தடையை அரசு நீக்க வேண்டும். தற்போதுள்ள சூழ்நிலையில் வரும் சட்டசபை தேர்தலுக்கு முன், அரசு கள் மீதுள்ள தடையை நீக்க உத்தரவிட வேண்டும். இல்லையெனில், கள்ளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் கட்சிகளை தோற்கடிப்பதே கள் இயக்கத்தின் முக்கிய குறிக்கோளாக அமையும். “டாஸ்மாக்’ கடைகளில் கள்ளையும் சேர்த்து விற்க அனுமதிக்க வேண்டும். கள் மீதான தடையை நீக்க அரசு ஏன் தயக்கம் காட்டி வருகிறது என்பதற்கு வெள்ளை அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும். இவ்வாறு, நல்லசாமி தெரிவித்தார். கள் இயக்க தாராபுரம் பகுதி அமைப்பாளர் மகுடபதி தலைமை வகித்தார். தமிழ்நாடு கள் இயக்க அமைப்பாளர் கதிரேசன், உப்பாறு பாசன விவசாயிகள் சங்க செயலாளர் ஈஸ்வரன், கீழ்பவானி பாசன விவசாயிகள் சங்க செயலாளர் தங்கராசு முன்னிலை வகித்தனர்.
தினமலர்- 18.1.2011
——————————————————————————————————
ஜன., 21ல் கள் விற்பனை துவக்கம்: கள் இயக்கம் உறுதி
பொங்கலூர் : “”உச்சநீதிமன்ற தீர்ப்பை மதித்து கள்ளுக்கான தடையை நீக்கினால், கள் போராட்டம் விலக்கிக் கொள்ளப்படும்,” என்று கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் நல்லசாமி பேசினார்.கள் இயக்க ஆலோசனை கூட்டம், பொங்கலூர் கண்டியம்மன் கோவிலில் நடந்தது. கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்க மாநில தலைவர் பழனிசாமி தலைமை வகித்தார். திருப்பூர் மாவட்ட தென்னை விவசாயிகள் சங்க தலைவர் சண்முகசுந்தரம் வரவேற்றார். பொருளாளர் ராஜேந்திரன், முத்துசாமி முன்னிலை வகித்தனர்.கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் நல்லசாமி பேசியதாவது: ஜன., 21ம் தேதி காலை 11.00 மணிக்கு, ஈரோடு அரச்சலூரில் கள் விற்பனை துவங்கப்படும். முதல் விற்பனையை மத்திய அமைச்சர் துவக்கி வைக்கிறார். நீலகிரி தவிர மற்ற மாவட்டங்களில், 11.30 மணிக்கு கள் விற்பனை துவங்கப்பட்டு, சந்தைப்படுத்தப்படும். உலகில் 108 நாடுகளில், பனை, தென்னை மரங்கள் உ ள்ளன. அங்கெல்லாம் கள் இறக்க தடை இல்லை. இந்தியாவில் தமிழகத்தில் மட்டும் கள்ளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. கள் மதுவல்ல என்று உச்சநீதிமன்றமே தெரிவித்துள்ளது. அரசியலுக்கு உட்பட்டது மது விலக்கு சட்டமா, மது விலக்கிற்கு உட்பட்டது அரசியல் சட்டமா என்பதை அரசு தெளிவுபடுத்த வேண்டும். நம் கோரிக்கையில், நியாயம் இல்லை என்று அரசு நிரூபித்தால், பேராட்டம் கைவிடப்பட்டு, மன்னிப்பு கேட்கப்படும். இவ்வாறு, நல்லசாமி பேசினார்.கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்க தலைவர் பழனிசாமி பேசுகையில், “”லட்சம் கோடி கொள்ளையடித்தவர்களை ஆயிரக்கணக்கானோர் திரண்டு வரவேற்பு கொடுக்கிறார்கள். அதை விடவா கெடுதல் செய்து விட்டோம். கோவையில் 1972ல் கட்டை வண்டி போராட்டம் நடந்தபோது, போராட்டத்தை கைவிட்டு பேச்சுக்கு அழைத்த கருணாநிதி, நான் அழைக்கவே இல்லை என்று திருப்பி அனுப்பியவர். இவர் நம்பத்தகுந்தவர் இல்லை. அதே நிலைமை இன்று கள்ளுக்கும் வந்து விடும். நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்,” என்றார். தென்னை விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் ஈஸ்வரன், வாவிபாளையம் ஊராட்சி தலைவர் பார்த்தசாரதி, கட்சி சார்பற்ற கொங்கு பேரவை மாநில அமைப்பாளர் மணிகண்டன், கோவை மாநகர் மாவட்ட தலைவர் தங்கராஜ், கோவை மாவட்ட தலைவர் சண்முகம் உள்பட பலர் பங்கேற்றனர்.
தினமலர்–15.1.2011
——————————————————————————————————
21ல் கள் இறக்கும் போராட்டம் : தமிழ்நாடு கள் இயக்கம் உறுதி
காங்கயம் : “”ஈரோடு மாவட்டத்தில் உள்ள அரச்சலூரில் வரும் 21ல் கள் இயக்கம் சார்பில் கள் இறக்கி, விற்பனை செய்யப் படும்,” என ஒருங்கிணைப்பாளர் நல்லசாமி பேசினார். கள் இயக்கம் சார்பில் இயற்கை வள பாதுகாப்பு பொதுக்கூட்டம், காங்கயம் சீரணி அரங்கில் நடந்தது. இயற்கை வாழ்வுரிமை இயக்க ஒருங்கிணைப்பாளர் சண்முகம் வரவேற்றார். தலைவர் பொடாரன் தலைமை வகித்தார். தமிழ்நாடு கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் நல்லசாமி பேசியதாவது: கள் இறக்குவதும், பருகுவதும் அரசியலமைப்பு சட்டம் மக்களுக்கு கொடுத்திருக்கும் உணவு தேடும் உரிமை. இந்த உரிமை தமிழகத்தில் மட்டும் கடந்த 23 ஆண்டுகளாக பறிக்கப்பட்டுள்ளது. இது, அரசியல மைப்பு சட்டத்தையும், உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை யும் மதிக்காத செயலாகும். உலகில் 108 நாடுகளில் பனை, தென்னை மரங்கள் உள்ளன. இதில் எந்த நாட்டிலும் கள் இறக்கவும், பருகவும் தடை கிடை யாது. ஆனால், தமிழகத்தில் மட்டும் கள்ளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. தேர்தல் கமிஷன், 2011ம் ஆண்டில் தேர்தல் தேதி அறிவிப்பதற்குள், தமிழக அரசு கள்ளுக்கு உண்டான தடையை நீக்க வேண்டும். இல்லையெனில், தமிழக முதல்வர் மட்டுமின்றி, முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஆகியோர் எந்த தொகுதியில் நின்றாலும், கள் இயக்கம் அவர்களுக்கு எதிராக தேர்தல் பணியில் ஈடுபடும்; அவர்களை தோற்கடிக்கும் முயற்சியில் ஈடுபடும். தமிழகத்தில் கள் இறக்க இழந்து விட்ட உரிமையை மீட்கும் வகையில், வரும் 21ம் தேதி, ஈரோடு மாவட் டத்தில் உள்ள அரச்சலூரில் கள் இறக்கி, விற்பனை செய்ய கள் இயக்கம் முடிவு செய்துள்ளது; முதல் விற் பனையை மத்திய அமைச்சர் துவக்கி வைக்க உள்ளார். கட்சி வேறுபாடு இல்லாமல், ம.தி.மு.க., உட்பட பல்வேறு கட்சிகள் ஆதரவு அளித்துள்ளன, என்றார். பேராசிரியர் மணிவண்ணன், திருப்பூர் மாவட்ட சித்த மருத்துவ சங்க தலைவர் தணிகாசலம், கவிஞர் ஜெயராம், உழவர் விவாதக்குழு அமைப்பாளர் முத்துலட்சுமி உட்பட பலர் பங்கேற்றனர்.
தினமலர்–13.1.2011
—————————————————————————————————–
தடையை மீறி கள் இறக்கப்படும் தமிழ்நாடு கள் இயக்கம் அறிவிப்பு
தர்மபுரி: “தமிழகம் முழுவதும் ஜனவரி 21 முதல் தடையை மீறி கள் இறக்கப்படும்’ என, தமிழ்நாடு கள் இயக்கம் அறிவித்துள்ளது.
சேலம் மண்டல தென்னை, பனை, பாக்கு மரம் ஏறும் தொழிலாளர் நல சங்கம் சார்பில் தர்மபுரி ராஜகோபால்பூங்கா அருகே பொதுக்கூட்டம் நடந்தது. சேலம் மண்டலத் தலைவர் பாலன் தலைமை வகித்தார். மண்டல பொதுச் செயலாளர் சீனிவாசன் வரவேற்றார். தர்மபுரி மாவட்டத் தலைவர் ஜெயராஜ், பொருளாளர் செங்கோடன், பாலக்கோடு வட்டத் தலைவர் நாகராஜ், பாலக்கோடு வட்ட செயலாளர் ராஜா, துணை தலைவர் சக்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்துக்கு பின் தமிழ்நாடு கள் இயக்க கள ஒருங்கிணைப்பாளர் நல்லசாமி நிருபர்களிடம் கூறியது: தமிழக அரசு கள் இறக்க அனுமதி தராததால் ஜனவரி 21 ம் தேதி தடையை மீறி ஈரோடு மாவட்டம் அரச்சலூரில் கள் இறக்கப்பட்டு மத்திய அமைச்சர் ஒருவரால் விற்பனை துவக்கப்படவுள்ளது. தொடர்ந்து தமிழகம் முழுவதும் தடையை மீறி கள் இறக்கப்படவுள்ளது. அரசு தடுத்தால் நீதிமன்றத்துக்கு செல்வோம்.
கள் உணவோடு ஒரு பகுதி என்பதால் மற்ற மாநிலங்களில் கள் இறக்க தடையில்லை. தமிழகத்தில் டாஸ்மாக்கை அரசு நடத்தி கள் இறக்குவோர்களின் வாழ்க்கை தரத்தை நாசப்படுத்திவருகிறது. கள் இறக்கும் போராட்டத்துக்கு ஆதரவு கோரி அ.தி.மு.க., -ம.தி.மு.க.,- பா.ம.க.,- கம்யூனிஸ் கட்சிகளுடன் பேசப்பட்டுள்ளது.
தர்மபுரியில் ஜனவரி 11ம் தேதி அசுவமேதா யாகம் நடத்த மாவட்ட எஸ்.பி., யிடம் அனுமதி கோரப்பட்டுள்ளது. தொடர்ந்து சென்னையில் குடியரசு தினத்தன்று அசுமேதா யாகம் நடத்தப்படும். கள் ஆய்வு குறித்து நீதிபதி சுப்பிரமணியன் தலைமையிலான குழு அறிக்கையை சட்ட சபையில் அரசு வெளியிட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
தினமலர்–9.1.2011
—————————————————————————————————–
உரத்த சிந்தனை: “கள்’ தரும் வாழ்வு – ஸ்ரீனிவாசன் -பொறியாளர்
“கள் இறக்குவதை அனுமதிக்க வேண்டும்’ என்று, தென்னை விவசாயிகள் வலியுறுத்துவதும், அரசு அதை தட்டிக் கழிப்பதும் வாடிக்கையாகிவிட்டது.
தமிழ்நாடு வருவாய் துறை, 2003 ஜன., 25ல், தென்னை விவசாயிகளுக்கு, தன் அறிக்கை எண், 44 மூலம், நிவாரணம் அறிவித்தது. மூச்சைப் பிடித்துக் கொள்ளுங்கள்… 11 லட்சம் முழுமையாக அழிந்த தென்னை மரங்களுக்கும், 28 லட்சம் பகுதியாக அழிந்த தென்னை மரங்களுக்குமாக மொத்தம், 39 லட்சம் மரங்களுக்கு அரசு அறிவித்த நிவாரணம், 8.90 கோடி ரூபாய். அதாவது, ஒரு மரத்திற்கு, 22.85 ரூபாய். இப்போதாக இருந்தால், விலைவாசி ஏற்றத்தைச் சேர்த்து, 50 ரூபாயாக இருந்திருக்கலாம்.நூறு மரங்களை வைத்து, இரண்டு ஏக்கரில் பாடுபடும் விவசாயி, இத்தொகையைக் கொண்டு என்ன செய்ய முடியும்? இந்த பணத்தையும் முழுதாக எத்தனை பேர் வாங்கினரோ? இதுதான் தென்னை விவசாயிகளின் யதார்த்த நிலை.கடந்த அக்டோபர் 10ம் தேதி, கேரளாவின் தேசிக கர்சக சமாஜத்தின் பொதுச்செயலர் முதலாம்தோடு மணி, ஒரு கணக்கு கொடுத்துள்ளார்.அது-ஒரு தென்னை மரம், வருடத்தில் 120 காய்கள் கொடுக்கும்.
அதன் மூலம், விவசாயிக்கு, காய் ஒன்றுக்கு ஐந்து ரூபாய் வீதம், வருடத்தில் 600 ரூபாய் கிடைக்கும். அதுவே, “கள்’ இறக்க குத்தகைக்கு விட்டால், மரத்துக்கு, மாதத்திற்கு 280 ரூபாய் வீதம், ஆறு மாதங்கள், “கள்’ இறக்க முடியும் என்பதால், வருடத்திற்கு 1,680 ரூபாய் கிடைக்கும். அதாவது, அவன் வாழ்க்கைத்தரம் மும்மடங்கு உயரும்.”கள்’ இறக்க அனுமதிப்பதன் மூலம், உடனே, “கள்’ ஆறாக ஓடும், தேங்காயும், தேங்காய் எண்ணெயும் கிடைக்காது என்று தப்புக் கணக்கு போட வேண்டாம். கேரளாவின் புள்ளியியல் மற்றும் பொருளாதாரத்துறை இயக்குனரகம் கொடுத்துள்ள கணக்கின்படி, கேரளாவில் இருக்கும், 15.73 கோடி தென்னை மரங்களில், 2.5 லட்சம் மரங்களில் மட்டுமே, “கள்’ இறக்கப்படுகிறது. இது, 40 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு வழங்குகிறது.
கேரளாவில், 2009 – 10ம் வருடம், மது, “கள்’ மூலம், அரசுக்கு 4,260 கோடி ரூபாய் வருமானம் கிட்டியுள்ளது. மேலும், “கள்’ மற்றும் பிற வகை மது வகைகளிலிருந்து கிடைக்கும் வருமானம், கேரள அரசுக்கு, 1:3 என்ற விகிதத்தில் இருக்கிறது என்று, ஒரு புள்ளி விவரம் தருகிறது. அதாவது, 4,260 கோடி ரூபாய் வருமானத்தில், 1,065 கோடி மட்டுமே, “கள்’ மூலம் கிடைத்ததாக அக்கணக்கில் கூறப்பட்டுள்ளது.தமிழகத்தில், அதே கணக்கின்படி பார்த்தால், 14 ஆயிரம் கோடி ரூபாய் வருமானத்தில், “டாஸ்மாக்’ 3,500 கோடி ரூபாய் மட்டுமே, “கள்’ மூலம் இழக்கும் வாய்ப்பு உள்ளது. அதாவது 1,750 கோடி ரூபாய் மட்டுமே.கேரளாவில், விவசாயிக்கு, ஒரு மரத்துக்கு, மாதம் 280 ரூபாய் கிடைத்தாலும், “கள்’ இறக்கும் வியாபாரி, மாதத்திற்கு 3,600 ரூபாய் சம்பாதிக்கிறார். அதாவது, ஒரு மரத்திற்கு, ஒரு நாளைக்கு, “கள்’ நான்கு லிட்டர் வீதம், மாதம் 120 லிட்டர். லிட்டர் கள்ளுக்கு, 30 ரூபாய் என்ற கணக்கில், 3,600 ரூபாய் வருமானம் பார்க்கிறார். இதில், அவருடைய அவ்வளவு செலவும் அடங்கும்.இந்த “கள்’ளை, கள்ளுக் கடையில் லிட்டர், 50 ரூபாய் வரையில் விற்கின்றனர்.
அதாவது, கடைக்காரர், 20 ரூபாய் லாபம் பார்க்கிறார். இது சதவீத கணக்கில், 66.66 சதவீதம் என்று வருகிறது. தமிழகத்தில் அரசே கடைகள் நடத்துவதால், இந்த லாபம் அரசுக்கே கிடைக்கும்.கேரளாவில், 2.5 லட்சம் மரங்களில், 1,800 லட்சம் லிட்டர், “கள்’ இறக்கப்படுகிறது. இது, கணக்கிற்கு, 1,050 கோடி ரூபாய். தமிழகத்தின், 3,500 கோடி ரூபாய் கணக்கிற்கு, இது, 6,000 லட்சம் லிட்டர் என்று வரும். லிட்டருக்கு 20 ரூபாய் என்ற வகையில், அரசுக்கு, 1,200 கோடி ரூபாய் வருவாய் கிடைக்கும்.ஆகவே, அரசுக்கு 550 கோடி ரூபாய் மட்டுமே இழப்பு வரும். மரத்துக்கு இவ்வளவு என்று வரி விதித்தால், இதில் சிறிதளவு குறைக்க முடியும். மேலும், இந்த, “கள்’ இறக்கும் தொழில், 1.50 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பை வழங்கும், வாழ்க்கைத் தரத்தை அதிகரிக்கும்.கடந்த, 2003 – 04ம் ஆண்டு, அரசுக்கு கேளிக்கை வரி மூலம், 75 கோடி ரூபாய் கிடைத்தது.
தமிழில் பெயர் வைத்தால், கேளிக்கை வரி கிடையாது என்ற அரசாணையின் மூலம், 2008 – 09ல், இது, 12 கோடி ரூபாயாக குறைந்துள்ளது. இதில், இவ்வளவு இழக்கத் தயாராக இருக்கும் அரசு, பல்லாயிரம் விவசாயிகளின் வாழ்க்கைத்தரம் உயரவும், 1.5 லட்சம் வேலைவாய்ப்பை உருவாக்கவும், 550 கோடி ரூபாயை இழப்பாகக் கருதாமல், முதலீடாக நினைக்க வேண்டும்.ஆனால், இதை செய்யாமல் இருக்க அரசு சொல்லும் காரணம் ஏற்கக் கூடியதாக இல்லை. “பிராந்தி, விஸ்கி போன்ற மது வகைகளில், எங்களால் தரக்கட்டுப்பாடு செய்வது சுலபம். ஆனால், அது “கள்’ளில் முடியாது’ என்று, கூறுகிறது. இப்படி பார்த்தால், டீ கடைகளில் கூட, அரசால் தரக்கட்டுப்பாடு செய்ய முடியாது. அதற்காக டீ கடைகளே வேண்டாம் என்றனரா?இங்கே, “கள்’ விற்கப் போவது அரசே… தேவையான கட்டுப்பாடுகள் கொண்டு வர வேண்டியது தானே!
எங்கோ குடியே இல்லாத தேசத்தில் நாம், “கள்’ இறக்க அனுமதி வேண்டும்’ என்று கேட்கவில்லை. 14 ஆயிரம் கோடி ரூபாய்க்குக் குடியை பழக்கப்படுத்திவிடப்பட்ட இடத்தில் தான், உரிய பங்கை தென்னை விவசாயிகள் கேட்கின்றனர். “கள்’ளில், 4.5 சதவீதம் மட்டுமே, போதை தரும் ஆல்கஹால் உள்ளது. இது, பீரில் உள்ள ஆல்கஹால் அளவு மட்டுமே.ஆகவே, “கள்’ மூலம் 55 சதவீதம் வரை போதை உள்ள மது வகைகளை உட்கொள்ளுபவர்களை திசை திருப்ப முடியுமானால், அதுவுமே ஒரு முன்னேற்றம் தான்.இவ்வளவு கூறியும் அரசு, “கள்’ இறக்குவதை அனுமதிக்க மறுக்குமானால், அதற்குக் காரணம் எல்லாருக்கும் தெரிந்த விஷயம் தான். இந்திய தயாரிப்பு, அன்னிய வகை மதுபான உற்பத்தியாளர்களுக்கு சலுகை காட்டி, அதன்மூலம், ஆளுவோர் பயன் பெறுகின்றனர் என்பது தான்.email: sp_mls@yahoo.co.in
தினமலர்– 8.1.2011
—————————————————————————————————–
கள் இயக்கம் ராகுலுக்கு கடிதம்
ஈரோடு: தமிழகத்தில் கள்ளுக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்க கோரி, தமிழ்நாடு கள் இயக்கத்தின் சார்பில் அதன் ஒருங்கிணைப்பாளர் நல்லசாமி, காங்கிரஸ் பொதுசெயலாளர் ராகுலுக்கு கடிதம் எழுதியுள்ளார்.கடிதத்தில் அவர் கூறியுள்ளதாவது:”கள் மது அல்ல; உணவின் ஒரு பகுதி’ என, இந்திய அரசியல் சட்டமும், உச்ச நீதிமன்ற தீர்ப்பும் கூறுகின்றன. கள் இறக்குவதும், பருகுவதும் அரசியல் சட்டம் மக்களுக்கு அளித்திருக்கும் உணவு தேடும் உரிமை. இந்த உரிமை தமிழகத்தில் மட்டும் பறிக்கப்பட்டுள்ளது.
13வது லோக்சபா அமைக்கப்பட்டு, குடியரசு தலைவர் பேசியதிலும், 2009-2010 மற்றும் 2010-2011ம் ஆண்டு பட்ஜெட்டிலும், கள் இறக்குவோர் நலன் இடம்பெற்றுள்ளது. ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் அங்கம் வகிக்கும் தி.மு.க., இந்தியளவில் கள்ளை ஏற்றுக்கொள்கிறது. தமிழக அளவில் ஏற்றுக்கொள்ள மறுக்கிறது. வரும் 21ம் தேதி முதல் தமிழகத்தில் கள் இறக்கி சந்தைபீஞூபடுத்துவதை தீவிரப்படுத்துவது என, தமிழ்நாடு கள் இயக்கம் முடிவு செய்துள்ளது.”புளிக்காத கள் சத்தான உணவு’ என, மஹாத்மா காந்தி கூறியுள்ளார். முதல்கட்டமாக ஜனவரி 21ல் ஈரோடு மாவட்டம் அறச்சலூரில் அத்தகைய கள்ளின் முதல் விற்பனையை துவக்கி வைக்க மத்தியரசில் இடம்பெற்றுள்ள அமைச்சர் ஒருவரை அழைக்க இயக்கம் முடிவு செய்துள்ளது. தாங்கள் இதற்கான ஏற்பாடுகளை செய்ய வேண்டும்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
தினமலர்–6.1.2011
——————————————————————————————————
கருணாநிதி, ஜெ.,வை எதிர்த்து கள் இயக்கம் போட்டியிட முடிவு
அன்னூர் : “”முதல்வர் கருணாநிதி சட்டசபை தேர்தலில், எந்த தொகுதியில் போட்டியிட்டாலும், தமிழ்நாடு கள் இயக்கம் சார்பில் அவரை எதிர்த்து வேட்பாளர் நிறுத்தப்படுவார்,” என, கள் இயக்கத்தின் தலைவர் நல்லசாமி தெரிவித்தார். தமிழ்நாடு கள் இயக்கத்தின் ஆலோசனை கூட்டம் அன்னூரில் நேற்று முன்தினம் நடந்தது. கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்கத்தின் மாநில தலைவர் பழனிச்சாமி தலைமை வகித்து பேசுகையில், “ஜனவரி 21ம் தேதி தமிழகத்தில் தடையை மீறி, தென்னை மற்றும் பனை மரங்களில் கள் இறக்கப்படும். விவசாயிகளின் வாழ்க்கை தரத்தை பொருளாதார ரீதியில் மேம்படுத்த கள் இறக்குவதே ஒரே தீர்வு’ என்றார்.
தமிழ்நாடு கள் இயக்கத்தின் தலைவர் நல்லசாமி பேசியதாவது: உலகில் 118 நாடுகளில் கள்ளுக்கு தடையில்லை. இந்தியாவில் பல மாநிலத்தில் கள் விற்கப்படுகிறது. தமிழகத்தில் கள் விற்பனை துவங்கினால், டாஸ்மாக் கடைகளில் விற்பனை குறைந்து விடும். கேரள அரசால் கள் விவகாரத்துக்கு நியமிக்கப்பட்ட உதயபானு கமிஷன் அறிக்கையின் தமிழ் மொழிபெயர்ப்பு புத்தகம் நாளை சேலத்தில் வெளியிடப்படுகிறது. கள்ளுக்கு ஆதரவு தருவதாக கூறி வந்த கருணாநிதி பின்வாங்கி விட்டார். இதற்காக நியமிக்கப்பட்ட சிவசுப்பிரமணியன் கமிட்டி அளித்த அறிக்கையை வெளியிடவில்லை. கமிட்டியின் பரிந்துரை குறித்து ஆய்வு செய்ய கமிட்டி அமைத்துள்ளார். இது விவசாயிகளை ஏமாற்றும் தந்திரம். வருகிற சட்டசபை தேர்தலில், முதல்வர் கருணாநிதி எங்கு போட்டியிட்டாலும், அவரை எதிர்த்து கள் இயக்கம் சார்பில் முன்னாள் எம்.எல்.ஏ., பழனிச்சாமி போட்டியிடுவார். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா எங்கு போட்டியிட்டாலும், அவரை எதிர்த்து நான் (நல்லசாமி) போட்டியிடுவேன். எனது சொந்த ஊரான அரச்சலூரில் கள் இறக்கி மெயின் ரோட்டில் பானையில் வைத்து விற்பனை செய்வேன். இலங்கையில் கள்ளை பதப்படுத்தி, டப்பாக்களில் நிரப்பி சுகாதாரமான முறையில் விற்கின்றனர். இவ்வாறு நல்லசாமி பேசினார். மாநகர் தலைவர் தங்கராஜ் பேசுகையில், “கோவை மாவட்டத்தில் கள் இறக்கும் போராட்டம் 100 சதவீதம் வெற்றி பெறும்’ என்றார். மாவட்ட தலைவர் சண்முகம், குப்பேபாளையம் நடராஜ் உட்பட பலர் பங்கேற்றனர்.
தினமலர்–23.12.2010
—————————————————————————————————
ஜனவரியில் “கள்’ இறக்க முடிவு : “கள்’ இயக்கம் தீவிரம்
சோமனூர் : தமிழகம் முழுவதும் “கள்’ இறக்கும் முயற்சியில் ஜனவரி 21ம் தேதி ஈடுபட கள் இயக்கம் முடிவு செய்துள்ளது.இதற்கான ஆயத்த கூட்டங்கள் நாளை முதல் துவங்குகிறது.
தமிழக கள் இயக்கத்தின் சார்பில் கோவையில் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. ஜன.,21ம் தேதி விவசாயிகள் தென்னை மரங்களில் கள் இறக்க முடிவு செய்துள்ளனர். இதுகுறித்து, பகுதிவாரியாக விவசாயிகள் மற்றும் தென்னை வளர்ப்போர், மரம் ஏறும் தொழிலாளர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரையும் நேரில் சென்று சந்தித்து இதற்கான ஆயத்தங்களை செய்ய தமிழக கள் இயக்கம் முடிவு செய்துள்ளது.
முதல்கட்டமாக இந்த கூட்டம், நாளை 17ம் தேதி பொங்கலூர் மற்றும் சுல்தான் பேட்டை பகுதியில் துவங்குகிறது. வரும் 18ம் தேதி காலை 10.00 மணிக்கு சூலூர், முத்துக்கவுண்டன்புதூர் மாகாளியம்மன் கோவில் மண்டபத்தில் நடக்கிறது. மாலை 3.00 மணிக்கு சோமனூரில், நகர தலைவர் தண்டபாணி இல்லத்திலும் இந்த கூட்டம் நடக்கிறது.
தொடர்ந்து பல்லடம், கொடுவாய் பகுதிகளிலும் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. தினமும் பகுதிவாரியாக இந்த ஆலோசனைக் கூட்டங்கள் நடத்தப்படுகிறது. இக்கூட்டங்களில், தென்னை மரங்களில் “கள்’ இறக்க தேவையான ஆயத்தங்களைச் செய்ய விவசாயிகளுக்கு வேண்டுகோள் விடுக்கப்படும். இந்த தகவலை கோவை மாவட்ட கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்க தலைவர் சண்முகம் தெரிவித்தார்.
தினமலர்– 15.12.2010









